டாக்கா: இந்தியா எங்கள் அண்டை நாடு என்பதால் அதனுடன் எந்தவிதமான அடிப்படை பிரச்சினைகளும் இருப்பதை விரும்பவில்லை என பங்ளாதேஷ் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உண்மைக்குப் புறம்பான தகவல்களால் எல்லாம் தவறாக முடிந்துவிடுகிறது என்றும் இந்தியாவுடன் சிறந்த உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே பங்ளாதேஷின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா தமது பொறுப்பில் இருந்து விலகிய பின்னர், தொடர்ந்து இணையத்தில் வெளியாகும் தவறான தகவல்களைக் கொண்ட பிரசாரங்களால் பங்ளாதேஷின் கோபம் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
“இந்தக் கோபத்தைச் சமாளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால், இணைய வெளியில் நடைபெறும் பல்வேறு விஷயங்களில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. நாம் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், செய்கிறார்கள். அதனால் மீண்டும் கோபம் ஏற்படுகிறது,” என்றார் முகமது யூனுஸ்.
எதிர்வரும் 2026 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பங்ளாதேஷின் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் இது அந்நாட்டின் வரலாற்றில் மிகச் சுதந்திரமான, நியாயமான, அனைத்து வகையிலும் ஏற்கத்தக்க தேர்தலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஷேக் ஹசீனா சமூக ஊடகங்கள் மூலம் பங்ளாதேஷ் மக்கள் மத்தியில் பேசக்கூடாது எனப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். ஆனால் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிவிட்டார்.
“ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது அவர்களுடைய விருப்பம். அவரைக் கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி பங்ளாதேஷ் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
“ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தீர்ப்பாயம் விசாரணை நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. அவர் செய்த மேலும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும்,” என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.