கோல்கத்தா: பங்ளாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
இம்மாதம் 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கோல்கத்தா சென்ற அன்வருல் அஸிம் அனார், 56, என்ற அந்த எம்.பி.யை 14ஆம் தேதியிலிருந்து காணவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து அவர் கொல்லப்பட்டதும் அவரது தோலை உரித்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, நெகிழிப் பைகளில் போட்டு, நகர் முழுவதும் வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பில், பங்ளாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து மும்பை நகரில் குடியேறிய ஜிகாத் ஹவ்லதர் என்பவரை மேற்கு வங்கக் குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) அதிகாரிகள் கைதுசெய்தனர்.
அன்வருலைக் கொன்றதையும் அவரது உடலைக் கூறுபோட்டு வீசியதையும் ஹவ்லதர் ஒப்புக்கொண்டதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பங்ளாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான அக்தருஸ்ஸமான் என்பவர்தான் இக்கொலையின் மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது உத்தரவின்பேரில், ஹவ்லதர் மேலும் நான்கு பங்ளாதேஷியருடன் சேர்ந்து, அன்வருலை மூச்சுத் திணறடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அன்வருல் கொல்லப்பட்டதாகவும் அதன் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமையன்று பங்ளாதேஷ் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அன்வருல் கொல்லப்பட்டதாக நம்பப்படும் கோல்கத்தா நியூடவுன் குடியிருப்பில் ரத்தக்கறை படிந்திருந்ததைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், அங்கிருந்து பல நெகிழிப் பைகளையும் கைப்பற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
அன்வருல் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதையும் பின்னர் அவரது உடல் கூறுபோடப்பட்டதையும் சான்றுகள் கோடிகாட்டுவதாகக் காவல்துறை கூறியது.
கோல்கத்தா நகரில் அன்வருலின் உடற்பகுதிகள் வீசப்பட்ட இடங்கள் குறித்து தகவலறிய முயன்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், அன்வருல் கொலை தொடர்பில் விசாரிப்பதற்காக மேற்கு வங்க சிஐடி அதிகாரிகள் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிற்குச் சென்றுள்ளது.
‘பெண்மூலம் வலைவிரிப்பு’
இதனிடையே, கொலைக்கும்பல் பெண் ஒருவரின் துணையுடன் அன்வருலைத் தங்களிடத்திற்கு வரச் செய்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அன்வருல் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வீட்டிற்குள் அவருடன் ஒரு பெண்ணும் செல்வது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
இதன் தொடர்பில், டாக்கா காவல்துறை ஷிலாஸ்தி ரகுமான் என்ற பெண்ணைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது. அவருக்கு அக்தருஸ்ஸமானைத் தெரியும் என்றும் கொலைகாரர்களுக்கு அக்தர் ரூ.5 கோடி கொடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

