புதுடெல்லி: பங்ளாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட பங்ளாதேஷில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பகைமை பாராட்டப்படுவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்றார்.
“பங்ளாதேஷில் இந்து இளையர் திபு சந்திரதாஸ் அண்மையில் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கிறது. மேலும் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார்.
“சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தொடர்பாக பங்ளாதேஷ் சார்பில் முன் வைக்கப்படும் கதையாடல்களை இந்தியா நிராகரிக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும், உள்நாட்டு நிகழ்வுகளுக்கும் பங்ளாதேஷ் அரசாங்கம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
“ஆனால் பிரச்சினைகள் வேறு திசையில் செல்வதாக கட்டுக்கதைகளை சித்திரிப்பது முற்றிலும் தவறானது. இந்தியா அவற்றை முற்றிலும் நிராகரிக்கிறது,” என்றார் ரந்திர் ஜெய்ஸ்வால்.
பங்ளாதேஷில் நடக்கும் அனைத்தையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்நாட்டு மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதை இந்தியா ஆதரிப்பதாகவும் அங்கு அமைதியும் நிலைத்தன்மையும் நீடிப்பதை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
“பங்ளாதேஷில் நியாயமான அனைவரையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தேர்தலை உறுதி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளின் பின்னணியில் இருந்து இது பார்க்கப்பட வேண்டும்,” என்றார் ரந்திர் ஜெய்ஸ்வால்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பங்ளாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பங்ளாதேஷ் இடைக்கால தலைவர் முகம்மது யூனுஸ் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
இந்நிலையில், இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் மட்டும் பங்ளாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900க்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் ஆதாரங்களுடன் ஆவணங்களாக அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வன்முறை சம்பவங்களை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று புறக்கணிக்கவோ அல்லது அரசியல் வன்முறை என்று ஒதுக்கிவிடவோ முடியாது என்றார் ரந்திர் ஜெய்ஸ்வால்.

