இந்திய ராணுவ நிலையத்தில் பணியாற்றிய பங்ளாதேஷ் ஆடவர் கைது

1 mins read
9af27c59-2055-4081-834c-fa6a6004c725
பிடிபட்டவரிடம் ஆதார், பான், வாக்காளர் அட்டை போன்ற இந்திய அடையாள அட்டைகள் இருந்தன. - மாதிரிப்படம்: பிக்சாபே

கோல்கத்தா: இந்தியா ராணுவ நிலையம் ஒன்றில் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்த பங்ளாதேஷ் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகேயுள்ள பெங்துபி ராணுவ நிலையத்தில் பணிபுரிந்துவந்த அவர், ஆதார், பான், வாக்காளர் அட்டை ஆகிய இந்திய அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தார்.

பதற்றநிலைக்கு உள்ளாக வாய்ப்புள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அந்த ராணுவ நிலையத்தில் தொழிலாளர்களாகப் பணிபுரிவோரின் ஆவணங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின்போது அந்த பங்ளாதேஷியர் பிடிபட்டார்.

அவரிடம் பங்ளாதேஷ் தேசிய அடையாள அட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேல்விசாரணைக்காகக் கடந்த புதன்கிழமையன்று காவல்துறையிடம் அந்த ஆடவர் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ராணுவ நிலையங்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதில் ராணுவ உளவு அமைப்புகளும் படைகளும் விழிப்புநிலையில் உள்ளன எனக் கூறிய அவர், இனியும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

“போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்திய அடையாள ஆவணங்கள் அதிகமான பங்ளாதேஷ் ஆடவரிடம் இருப்பதையும் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அவர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதையும் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்