பங்ளாதேஷ் வன்முறை: கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்

2 mins read
dc25c12c-2a8b-4ba2-871a-bba2f1308556
டெல்லியில் உள்ள பங்ளாதேஷ் தூதரகம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த தடுப்பறண்கள் தூக்கிவீசப்பட்டன. - படம்: இபிஏ
multi-img1 of 3

புதுடெல்லி: பங்ளாதேஷில் வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்கு இந்து சமயத்தைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற தொழிலாளி வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டச் சம்பவம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி, திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் உள்ள பங்ளாதேஷ் தூதரகங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவுகிறது.

இந்தியாவுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைப்பதாக பங்ளாதேஷ் அறிவித்தது. பங்ளாதேஷில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் திபு சந்திர தாஸ். இவர் வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியை அடுத்து இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பங்ளாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் நடப்பதாக வெளிவரும் தகவல்கள் குறித்து ஐநா கவலை தெரிவித்தது.

டெல்லியில் உள்ள பங்ளாதேஷ் தூதரகத்துக்கு வெளியே கூடிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்ளாதேஷுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, தூதரக கட்டடத்தை நோக்கி அணிவகுத்து செல்ல முயன்றனர்.

காவல்துறை ஏற்படுத்தி இருந்த தடுப்பரண்கள் தூக்கி வீசப்பட்டன. தலைநகரில் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்ட நிலையில், தூதரகத்துக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்ளாதேஷுக்கான இந்தியத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பங்ளாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கூறியுள்ளனர். இந்துக்கள் கொல்லப்படுவதாகவும் பங்ளாதேஷில் தங்கள் சகோதரிகளும் மகள்களும் தாக்கப்படுவதாகவும் ஒரு போராட்டக்காரர் அழுதுகொண்டே கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

போராட்டங்கள் காரணமாக டாக்காவில் விசா சேவைகள் நிறுத்தப்பட்டன.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, இந்தியாவிலுள்ள வங்கதேச தூதரகங்களில் விசா சேவைகளை அந்நாடு நிறுத்தியது.

இதனிடையே டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பங்ளாதேஷ் ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளை இந்தியா நிராகரித்தது.

அண்டை நாடான இந்தியாவிடம் இணக்கமான போக்கு நீடிக்க பங்ளாதேஷ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, 1971ஆம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் பங்ளாதேஷின் சுதந்திரத்துக்கு உதவியதை மறந்துவிடக் கூடாது என அவர் நினைவூட்டி உள்ளார்.

தோளோடு தோள் நின்று ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் பங்ளாதேஷில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து வன்முறை வெடித்தது. மாநகர அமைப்பின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, மற்றொரு மூத்த தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்நிலையில், அங்கு கலவரம், சிறுபான்மையினர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்