நாடு திரும்ப மேற்கு வங்க எல்லையில் குவியும் பங்ளாதேஷ் குடிமக்கள்

நாடு திரும்ப மேற்கு வங்க எல்லையில் குவியும் பங்ளாதேஷ் குடிமக்கள்

2 mins read
540e2ad9-b259-47e2-8e45-d12b216d19d3
கடந்த இரு வாரங்​களில் மட்​டும் சுமார் 26,000க்கும் மேற்​பட்​டோர் தாங்​களாகவே பங்ளாதேஷுக்கு தப்​பிச் சென்றுவிட்​ட​தாக ஊடகத் தகவல்​கள் தெரிவிக்கின்றன. - படம்: தி ஸ்டார்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என அம்மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அம்மாநில எல்லையில் சட்டவிரோதக் குடியேறிகள் குவிந்து வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரம் முக்கிய அங்கம் வகித்தது. பாஜக ஆட்சி அமைத்தால் 30 நாள்களில் சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது பாஜக ஆட்சி அமைந்ததை அடுத்து, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அங்கு அனைத்து மாவட்​டங்​களி​லும் சட்டவிரோதக் குடியேறிகளை அடைத்துவைக்க சிறப்புத் தடுப்பு மையங்களை அமைக்​க​ மாநில முதல்​வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காண்பது, அவர்களைப் பற்றி போலியான விவரங்களை அரசுப் பதிவேடுகளில் இருந்து அகற்றுவது, பின்னர் இந்தியாவை விட்டு வெளியேற்றுவது என மூன்று கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்​காரண​மாக கடந்த இரு வாரங்​களில் மட்​டும் சுமார் 26,000க்கும் மேற்​பட்​டோர் தாங்​களாகவே பங்ளாதேஷுக்கு தப்​பிச் சென்றுவிட்​ட​தாக ஊடகத் தகவல்​கள் தெரிவிக்கின்றன.

வடக்கு 24 பர்​கானஸ் மாவட்​டத்​தின் ஹக்​கிம்​பூர் எல்​லைப் பகுதியில் நூற்​றுக்​கணக்​கான பங்ளாதேஷ் மக்​கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களைப் பரிசோதித்த பிறகு அவர்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மூலம் பங்ளாதேஷிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் பங்ளாதேஷும் 4,000 கிலோமீட்டருக்கும் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளன. உலகின் மிக நீளமான நில எல்லைகளில் இதுவும் ஒன்றாகும்.

பங்ளாதேஷுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், கடந்த மே 2025 முதல், இதுவரை தீர்ப்பாயங்களால் சட்டவிரோதக் குடியேறிகள் என அறிவிக்கப்பட்ட 30,000 பேரில் நூற்றுக்கணக்கானோரை பங்ளாதேஷுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி இந்தியா ஏராளமானோரை பங்ளாதேஷுக்குள் வலுக்கட்டாயமாக அனுப்புகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பங்ளாதேஷ் சுற்றுக்காவல் பணிகளைத் தீவிரப்படுத்தி இருப்பதுடன், பொது விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“எல்லைப் பகுதிகள் முழுவதும் எங்களின் சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக ஊடுருவுதல், ஆட்கடத்தல், போதைப்பொருள் உள்ளிட்ட பிற பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான உளவு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று பங்ளாதேஷ் எல்லைக் காவல்படையின் 60வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் எஸ்.எம். ஷரிஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாள்களில் ஆயிரக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகள் பங்ளாதேஷிடம் ஒப்படைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்