புனே: கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வரும் 34 வயதான பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த எஹ்சான் ஹபீஸ் ஷேக் என்பவரை புனே நகரக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
தற்போது புனேயின் மகரிஷி நகர் பகுதியில் வசிக்கும் ஹபீஸ் ஷேக், ஸ்வர்கேட் காவல் நிலையத்தில் ஃஎப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கைது செய்யப்பட்டார்.
ஹபீஸ் ஷேக், பங்ளாதேஷின் மைமென்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரது கைப்பேசியில் இருந்து பங்ளாதேஷில் உள்ள அவரது உறவினர்களின் கைப்பேசி எண்களையும் காவலர்கள் கண்டுபிடித்தனர்.
ஹபீஸ் ஷேக், கடந்த 2004ல் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக ஃஎப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
அவர் கோல்கத்தாவில் இருந்து முகவர்களின் உதவியுடன் போலி பிறப்புச் சான்றிதழையும் பின்னர் இந்தியக் கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற ஆவணங்களையும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
எஃப்ஐஆர் தகவல்களின்படி, ஏழு ஆதார் அட்டைகள், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள், இரண்டு ஓட்டுநர் உரிமங்கள், ஏழு பான் கார்டுகள், நான்கு கடவுச் சீட்டுகள், ஒன்பது டெபிட் கார்டுகள், ஒன்பது கிரெடிட் கார்டுகள், ஒரு யுனிவர்சல் பாஸ், எட்டு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பங்ளாதேஷ், பாகிஸ்தான், மலேசியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ரொக்கப் பணத்தையும் ஹபீஸ் ஷேக்கின் இல்லத்திலிருந்து காவலர்கள் மீட்டனர்.
அத்துடன், அவரது கைப்பேசி, சிம்கார்டுகள், வணிக ஆவணங்கள், வீட்டு வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றையும் காவலர்கள் கைப்பற்றினர். அவர் 2009ல் புனே வந்தார். அவர் 2012 இல் மகரிஷி நகரில் குடியேறுவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் வசித்து வந்ததாகவும் அங்கு ஒரு ஆடைக் கடையைத் திறந்ததாகவும் கூறப்படுகிறது.

