புதுடெல்லி: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கள் உழைப்பையும் திறமையையும் முதலீடு செய்கிறார்கள். அவர்களுடைய உழைப்பும் திறமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்காளத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று திரு ரஞ்சன் குற்றம் சாட்டியிருந்தார்.
திரு ஆதிர் ரஞ்சன், பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் டிசம்பர் 30ஆம் தேதி சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மற்ற மாநிலங்களில் வேலை செய்துவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.
வங்க மொழி பேசுபவர்கள் மற்றும் வங்கதேசத்தவர்கள் ஆகியோருக்கு இடையே வேறுபாடு இருப்பதை, சம்பந்தப்பட்ட மாநிலக் காவல் துறை அதிகாரிகள் உணர்வதில்லை. இதனால், எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின்படி, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வசிக்கவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் முழு உரிமை கொண்ட அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறும் பாகுபாடு, வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்க, நாட்டின் அனைத்து மாநில அரசுகளுக்கும் நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திரு ரஞ்சன் கேட்டுக் கொண்டார்.
“நமது நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்,’’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திரு ரஞ்சன், பிரதமர் மோடி நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்று இனி நடக்காது என்றும் உறுதி அளித்ததாகக் கூறினார்.
மேலும், மேற்கு வங்கத்தில் 2026 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமாக இல்லை என்ற யூகங்களுக்கு இடையே அவர் பிரதமர் மோடியைச் சந்தித்திருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. தற்செயலாக பிரதமர் மோடியைச் சந்திக்க நேர்ந்தது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

