புதுடெல்லி: இந்தியாவில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பங்ளாதேஷ் குடிமக்கள் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்களைப் பெற்று தங்களை இந்தியக் குடிமக்களாக அடையாளப்படுத்திக் கொண்டு அந்தக் கள்ளக்குடியேறிகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக மாத்ருபூமி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அண்மையில் கொல்லம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பத்து பங்ளாதேஷியர்கள் கைதானதை அடுத்து, கள்ளக்குடியேற்றத்தின் பின்னணியில் செயல்படும் மோசடிக் கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
போலி ஆதார், ரேசன் அட்டைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்றுள்ள இந்தக் கும்பல் பெங்களூரில் இருந்து செயல்படுவதாக காவல்துறை சந்தேகிக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் கைதான பங்ளாதேஷியர்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள கொட்டாரக்கரா பகுதியில் வசித்து வந்ததாகவும், அவர்களுடைய கைப்பேசிகளை ஆய்வு செய்தபோது பங்ளாதேஷ் கடப்பிதழ்களின் நகல்கள் காணப்பட்டதை வைத்து அவர்கள் கள்ளக்குடியேறிகள் என்பதை உறுதிசெய்ததாகவும் கேரளக் காவல்துறை தெரிவித்தது.
பங்ளாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் சட்டவிரோதக் குடியேறிகள் முதலில் மேற்கு வங்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். பின்னர் அங்கு சில அடிப்படை ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்வதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் ஏராளமான பங்ளாதேஷியர்கள் அம்மாநிலத்துக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற அடையாளத்துடன் கேரளாவுக்குள் நுழையும் பலர், பின்னர் உள்ளூர் முகவரிகளைப் பயன்படுத்தி மற்ற ஆவணங்களைப் பெறுகின்றனர்.
கள்ளக்குடியேறிகள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டதும் குடும்ப உறுப்பினர்களை அடுத்தடுத்து வரவழைக்கிறார்கள். பின்னர் உறவினர்களும் வருகிறார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உளவு அமைப்புகள் இந்த சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. சட்டவிரோதக் குடியேறிகள் பற்றி புகார் அளிக்க மக்கள் தயங்கும் நிலையில், புலனாய்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

