‘பேங்க் ஆஃப் பரோடா’ வங்கி வாடிக்கையாளர் தரவுகள் கசிந்தன

‘பேங்க் ஆஃப் பரோடா’ வங்கி வாடிக்கையாளர் தரவுகள் கசிந்தன

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

27 Jul 2026 - 8:14 pm

1 mins read

மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் பரோடா’ வங்கியின் வாடிக்கையாளர் தரவுகளும் முக்கியமான ஆவணங்களும் சட்டவிரோதமாக இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் இணையத்தின் கறுப்புச் சந்தையில் இந்தத் தரவுத் தொகுப்பு விற்பனைக்குத் தயாராக உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

அத்தரவுகள் ஏறக்குறைய 700 ஜிபி (GB) அளவுக்கு மேல் இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கியின் மின்னஞ்சல் கட்டமைப்பு ஊடுருவப்பட்டதே இந்தத் தரவுக் கசிவுக்கு முதன்மையான காரணம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வங்கி நிர்வாகம் உடனடியாக ஒரு விரிவான தடயவியல் தணிக்கையைத் தொடங்கியுள்ளது.

தரவுக் கசிவால் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற துல்லியமான விவரம் இன்னும் வெளிவரவில்லை. மேலும், இது தொடர்பாகப் பங்குச் சந்தைகளுக்கு வங்கி நிர்வாகம் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் இணையப் பாதுகாப்பு அமைப்பான ‘செர்ட்-இன்’ (CERT-In) ஆகியவை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

அண்மைக்காலமாக இந்திய நிறுவனங்கள், அதன் முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
வங்கிதரவுவாடிக்கையாளர்இணையம்