புதுடெல்லி: வாரத்திற்கு ஐந்து நாள்கள் மட்டுமே பணிபுரியும் முறையை அமல்படுத்துவது உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ (UFBU) அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்குப் பதில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதலாகப் பணிபுரியத் தயார் என்றும் 2024 மார்ச் மாத ஒப்பந்தத்தில் வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டன.
இந்த ஒப்பந்தம் இந்திய நிதி அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை என சங்கத் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், மத்திய நிதிச் சேவைகள் துறை கொண்டுவந்துள்ள பாகுபாடான செயல்பாடு சார்ந்த ஊக்கத்தொகை முறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் ஊழியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 11ஆம் தேதியையடுத்துத் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அக்டோபர் 26 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் சங்கங்கள் எச்சரித்துள்ளன.


