தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர்கள்

2 mins read
b252726b-cc09-4704-9f5c-f9fae5244718
மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன. தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: வங்கி சங்கங்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.

அதற்காக மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.

தற்போது வங்கிகளில் காலியாக உள்ள 200,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களின் தாக்குதலிலிருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கமும் ஐக்கியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் இந்திய வங்கி சங்கத்தின் அதிகாரிகள், மத்திய நிதித்துறை செயலாளர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றை நேரடியாகக் கண்காணிப்பதாகத் தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார்.

மேலும், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்