தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது

2 mins read
04845b9b-711d-4d1a-9a98-36594743a0af
மெகுல் சோக்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: வங்கி மோசடி வழக்கில் சிக்கிய பின்னர் திடீரென வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிரபல இந்திய வைர வர்த்தகர் மெகுல் சோக்சி, பெல்ஜியம் நாட்டில் கைதானார்.

இந்தியாவில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற மெகுல் சோக்சி ரூ.6,097 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தன.

இதேபோல், அவருக்குச் சொந்தமான மற்றொரு நிறுவனம் ரூ.942 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்குப் பதிவானது.

மோசடி வழக்குகளை எதிர்கொண்ட மெகுல் சோக்சி, கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் டொமினிக்கன் தீவில் இருப்பது தெரியவந்தது. அவர் அந்நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மெகுல் சோக்சியின் நிறுவனங்கள் தங்க நகைகளையும், பங்கு பத்திரங்களையும் ஈடாக அளித்திருந்தன. ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை அதிகப்படியாக கணித்தன. இதனால் மோசடி வழக்குகளை எதிர்கொண்டார் மெகுல் சோக்சி. எனவே, அவர் இந்தியாவை விட்டு வெளியேறி, ஆன்டிகுவாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இந்திய தரப்பால் தேடப்பட்டு வந்த நிலையில், டொமினிக்கன் தீவில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் அதற்காக பெல்ஜியம் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு இதைச் சுட்டிக்காட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெல்ஜியம் காவல்துறை மெகுல் சோக்சியைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.

எனினும், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்றும் இதற்குப் பெரிய செயல்முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவக் காரணங்களை முன்வைத்து, மெகுல் சோக்சி பிணை கோருவார் என்றும் பெல்ஜியம் நாட்டின் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் அவர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்