சண்டிகர்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இந்தியத் தொழிலதிபர் நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளியான சந்தீப் மிஸ்த்ரியை ஐக்கிய அமீரக சிற்றரசுகள் நாடு கடத்தியுள்ளது.
இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையை அடுத்து, திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நள்ளிரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவரை, சிபிஐயின் வங்கிப் பத்திரங்கள், நிதி மோசடிப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹாங்காங்கை மையமாகக் கொண்டு இயங்கிய நீரவ் மோடியின் ‘ஃபேன்சி கிரியேஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக மிஸ்த்ரி பணியாற்றி வந்தார். நீரவ் மோடி, பிற குற்றவாளிகளுடன் இணைந்து கூட்டுச்சதி செய்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏறக்குறைய ரூ.6,498.20 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்ததில் மிஸ்த்ரிக்கும் மிக முக்கியப் பங்கு இருப்பதாகச் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், போலி நிறுவனங்களின் இயக்குநர்களை மிரட்டி, சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் அவர்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குத் தப்பியோட வைத்ததிலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு எனப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.
கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, சந்தீப் மிஸ்திரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குள் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
