புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, பிரபல ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்க், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்று அதை திருப்பித் தராமல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் குடும்ப நிறுவனங்களின் ரூ.11,000 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். புனித் கார்க்கை 80 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, புனித் கார்க்கின் மனைவி பெயரில் உள்ள பல்வேறு பங்குகள், பரஸ்பர நிதிகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
எனினும், புனித் கார்க் மனைவியிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

