தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி பணியிடமாற்றம்

2 mins read
இந்தியைத் திணிப்பதாகப் புகார்
05946184-819a-4ced-a49a-2b9e3ffb1fb9
கர்நாடகாவில் பணிபுரிந்தாலும் அம்மாநில மொழியான கன்னடத்தில் பேச மறுத்த பெண் அதிகாரி. - காணொளிப்படம்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரின் சூர்யா நகரில் இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கிக் (எஸ்பிஐ) கிளை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்ததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

கர்நாடக மக்களின் தாய்மொழி கன்னடமாக இருக்கும் நிலையில், அங்குப் பணியாற்றும் ஒருவர் ‘கன்னடத்தில் பேச முடியாது’ என அடம்பிடித்த காணொளி இணையத்தில் பரவியது.

‘இந்தியில் பேசாதீர்கள், கன்னடத்தில் பேசுங்கள்’ என அந்தப் பெண் மேலாளரிடம் ஆண் வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.

அதற்கு அந்தப் பெண் அதிகாரி, “நான் ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்,” என விடாப்பிடியாக மறுத்தார்.

அதற்கு, வாடிக்கையாளர்களுடன் அந்தந்த மாநில மொழியில் பேச வேண்டும் என்பது மத்திய ரிசர்வ் வங்கியின் விதி என்று அந்த வாடிக்கையாளர் வாதிட்டார்.

மேலும், அவர் ‘இது கர்நாடகா’ எனச் சொல்ல, அதற்கு அந்த அதிகாரி, ‘இது இந்தியா’ என்றார்.

இதுகுறித்த காணொளியைப் பயனர் ஒருவர் எக்ஸ் ஊடகத்தில் பகிர்ந்து, எஸ்பிஐ வங்கியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அதனுடன் ‘டேக்’ செய்தார். வாடிக்கையாளர்களிடம் அதிகாரிகள் இந்தியைத் திணிப்பதாகவும், முறையின்றி நடந்துகொள்வதாகவும், பணிநேரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அக்காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்த அதிகாரியின் செயலைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கர்நாடக ரக்‌ஷன வேதிகே (கேஆர்வி) எனும் அமைப்பு அறிவித்தது.

இதனையடுத்து, அவ்வதிகாரியின் செயலுக்காக எஸ்பிஐ வங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அந்த அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் பொது அறிக்கை மூலம் அவ்வங்கி விளக்கமளித்தது.

இதனிடையே, அந்த வங்கி அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அவ்வதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டதையும் அவர் வரவேற்றார்.

அதுபோல, பெங்களூரு தெற்குத் தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவும் அப்பெண் அதிகாரியின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருத்துரைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்