தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிக் கொள்ளை: நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.39 லட்சம் மீட்பு

2 mins read
42e2d13e-df64-4f6f-b196-72a717f59afd
மீட்கப்பட்ட பணத்துடன் காவல்துறையினர். - படம்: கேரள ஊடகம்

கோழிக்கோடு: வங்கியில் கொள்ளையடித்து, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.39 லட்சத்தைக் (S$58,900) காவல்துறையினர் மீட்டனர்.

இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், ராமநாட்டுக்கராவில் உள்ள இஎஸ்ஏஎஃப் வங்கியில் கடந்த ஜூன் 11ஆம் தேதி ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கொள்ளை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பந்தீரன்காவைச் சேர்ந்த ஷிபின் லால் என்பவரது வீட்டிற்கு அருகிலுள்ள காலியிடத்தில் ரூ.39 லட்சம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ‘மனோரமா நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ நாளன்று பிற்பகல் 1 மணியளவில் அந்தத் தனியார் வங்கிக்குச் சென்ற ஷிபின், அங்கிருந்த அரவிந்தன் என்ற ஊழியரை ஏமாற்றி, ரூ.40 லட்சத்துடன் மாயமானதாகச் சொல்லப்படுகிறது.

இரு நாள்களுக்குப் பின் ஷிபின் கைதுசெய்யப்பட்டார். முதற்கட்டமாக அவரிடமிருந்து ரூ.55,000 மீட்கப்பட்டது. விசாரணையில் எஞ்சிய பணத்தை நிலத்தில் வைத்துள்ளதாகக் காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியை ஆய்வுசெய்த காவல்துறை, கொள்ளையடித்த பிறகு ஷிபின் பந்தீரன்காவைவிட்டு வேறு எங்கும் செல்லவில்லை என்பதை உறுதிசெய்தது.

தனியார் நிறுவனம் ஒன்றில் ஷிபின் தங்கக் கடன் பெற்றிருந்ததாகவும் அதனைத் தீர்க்க வங்கியில் அவர் கொள்ளையடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டபோது, ரூ.35 லட்சம் செலுத்தி கடனைத் தீர்ப்பதாக ஷிபின் கூறியது தெரியவந்தது. அத்தகவலே விசாரணைக்குப் பெரிதும் உதவியதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கொள்ளைக்கு உதவியதாக ஷிபினின் மனைவி கிருஷ்ண லேகாமீதும் தினரஞ்சு என்ற அவரின் உறவினர்மீதும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இஎஸ்ஏஎஃப் வங்கி ஊழியர்களை ஏமாற்றுவதற்காகப் பல்வேறு நிதி நிறுவனங்களின் பெயரில் போலி ரசீதுகளை அவர்கள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்