நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ (எஸ்.பி.ஐ) கிளையில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை 30 நிமிடங்களிலேயே காவல்துறையினர் அதிவிரைவாகக் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 10) மாலை ஆறு மணியளவில், ஆடவர் ஒருவர், வாடிக்கையாளரைப் போல வங்கிக்குள் நுழைந்துள்ளார். பின்னர், பணப் பரிவர்த்தனைப் பிரிவில் உள்ள ஊழியரை அணுகிய அவர், திடீரென தனது முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு, பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வங்கி ஊழியர்களின் கண்ணில் தூவினார்.
ஊழியர்கள் எரிச்சலால் அலறித்துடித்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இருந்த ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அக்கூட்ட நெரிசலில் அந்த நபர் தப்பியோடினார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வங்கி மற்றும் அதன் வெளிப்புறங்களில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை உடனடியாக ஆய்வு செய்தனர். கொள்ளையன் தப்பிய திசையைக் கணித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவசரமாகச் சோதனைச் சாவடிகளை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள், வங்கிக்குச் சற்று தொலைவிலேயே குற்றவாளியை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவரிடமிருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மீட்டனர்.

