பெங்களூரு: பல மாநிலங்களை ஊடுருவி நடைபெற்ற இணையக் குற்றம் மற்றும் நிதி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த கடன்பற்று அட்டை பண விவகாரத்தைக் கையாளும் Cred தளத்தை நடத்தும் டிரீம்பிளக் நிறுவனத்திடம் அந்தக் கும்பல் 12 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
மோசடி தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கியின் வாடிக்கையாளர் உறவு மேலாளர் வைபவ் பித்தாடியா, 29, என்பவரும் வங்கி முகவர் நேஹா பென் விபுல்பாய், 26, காப்புறுதி முகவரும் வைபவ்வுடன் வேலை செய்தவருமான ஷைலேஷ், 29, ஆகியோருடன் ஷுபம், 26, என்பவரும் கைது செய்யப்பட்டார்.
டிரீம்பிளக் நிறுவன நிர்வாகி நரசிம்ம வசந்த் சாஸ்திரி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேகப் பேர்வழிகளை தேடிய காவல்துறை, நால்வரையும் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் கைது செய்தது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி தமது நிறுவனத்தின் கணக்குகளில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் நிகழ்ந்திருப்பதை டிரீம்பிளக் நிர்வாகிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கியில் வைத்துள்ள இரண்டு கணக்குகளில் இருந்து அக்டோபர் 29ஆம் தேதிக்கும் நவம்பர் 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 12.2 கோடி ரூபாய் வரை சுருட்டப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
டிரீன்பிளக்கின் ரகசியத் தகவல்களைத் திருடி அவற்றின் மூலம் நிறுவனத்தின் இணைய வங்கிக்குள் புகுந்து கும்பல் மோசடி செய்ததும் அம்பலமானது.

