புவனகிரி (தெலுங்கானா): நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. அதாவது நாட்டின் வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் போர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் புவனகிரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
“நடந்து முடிந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் மட்டும் பாஜக கூட்டணிக் கட்சிகள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தெலுங்கானாவில் கடந்த முறை 4 தொகுதிகள், இம்முறை 10 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“தெலுங்கானாவில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதுவரை அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் முழுவதுமாக நிறைவேற்றியதே இல்லை. 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்ட அவர்கள் குரல் எழுப்பியதே இல்லை,” என்று அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மேலும் அவர், “மோடி மீண்டும் பிரதமரானால், இட ஒதுக்கீடுகளை ரத்து செய்து விடுவார் என காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது,” என்று கூறியுள்ளார்.

