முசாஃபர்நகர்: ரயில் பயணத்தின்போது குளிரைப் போக்குவதற்காக, ரயில் பெட்டியினுள்ளேயே வறட்டியை (காய்ந்த பசுஞ்சாணம்) எரித்துக் குளிர்காய்ந்த பயணிகள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் தங்களது செயலால் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயன்றதாகக் கூறப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் அசாம் மாநிலம், கௌகாத்தியிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற சம்பார்க் கிராந்தி அதிவிரைவு ரயிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் குமார், தேவேந்திர சிங் என்ற இரண்டு இளையர்களைக் காவல்துறை கைதுசெய்தது.
அப்பகுதியில் குளிர் 10 டிகிரி செல்சியஸ்வரை சென்றுவிட்டது.
இதனையடுத்து, முன்பதிவற்ற பொதுப் பெட்டியில் பயணம் செய்த அவ்விரு இளையர்களும், “குளிரிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளவே வறட்டியை எரித்தோம்,” என்று விசாரணையின்போது கூறினர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் 14 பயணிகளைத் தடுத்துவைத்து விசாரித்ததாகவும் பின்னர் அவர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகவும் ரயில்வே காவல்துறை தெரிவித்தது.

