பலனளித்த சலுகைகள்: $36.7 பில்லியன் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை திரண்டது

பலனளித்த சலுகைகள்: $36.7 பில்லியன் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை திரண்டது

2 mins read
0acb64cc-5279-4aea-8cd5-0938c457f0ce
அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைத் திட்டங்களுக்கு இந்திய வங்கிகள் அதிக வட்டியை வழங்குகின்றன. - கோப்புப் படம்: பிஸ்னஸ் லைன்

புதுடெல்லி: அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைத் திட்டங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்புத்தொகைத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் உள்ள வங்கிகள் பேரளவு நிதியை ஈர்த்து வருகின்றன.

திட்டங்கள் செல்படுத்தப்பட்ட ஜூன் 8ஆம் தேதி தொடங்கி, ஜூலை 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட காலச் சலுகை மூலம் $36.725 பில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைத் திட்டங்களுக்கு வங்கிகள் 6 விழுக்காடு முதல் 7.50 விழுக்காடு வரை அதிக வட்டி வழங்குவதாலேயே இத்தகைய பெரும் நிதி குவிந்துள்ளது.

அந்நியச் செலாவணியை ஈர்க்கவும் ரிசர்வ் வங்கியின் நிதியை நிலைப்படுத்தவும் நிதிக் கொள்கை மதிப்பாய்வில் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான புதிய அந்நியச் செலாவணி வைப்புத்தொகைக்கு அதிக வட்டி.

பொதுத் துறை நிறுவனங்களின் அந்நியச் செலாவணிக் கடன்களுக்கு, சலுகை விலையில் அந்நியச் செலாவணி பரிமாற்றச் சலுகை.

இந்த இரண்டு சலுகைகளும் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

மொத்தத்தில், ஜூன் 8 முதல் இந்தியாவுக்கு $40.816 பில்லியன் அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.

அதில், வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை மூலம் $36.725 பில்லியன், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் $2.575 பில்லியன், அந்நியச் செலாவணி வர்த்தகக் கடன்கள் மூலம் $1.516 பில்லியன் ஆகியன அடங்கும்.

இவ்வாறு அந்நியச் செலாவணி வேகமாகத் திரண்டது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “இதே வேகம் வலுவாகத் தொடரும். தற்போதைய பொருளியல் நிலை, நடப்புக் கணக்கு மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு போன்றவை, கச்சா எண்ணெய் விலை உயர்வையும் தாண்டி சிறப்பாக உள்ளன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்