கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபுர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக வேட்பாளருமான சௌமித்ரா கான் 10,000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாகத் தகவல் வெளியான வேளையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சினை கிளப்பியதாக பாஜகவினர் கூறினர்.
அந்த வட்டாரத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகங்கள் சில சூறையாடப்பட்டதாகவும் உடனே பாஜகவினர் தடிகளுடன் வந்து பதிலடி தந்ததாகவும் இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் கடுமையாகப் போராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமைதி காக்கும்படித் தம் கட்சியினருக்கு ஆலோசனை கூறியிருப்பதாக வேட்பாளர் கான் கூறினார்.
இவ்வேளையில், 30 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் கோல்கத்தாவில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்துக்கு அருகே தொண்டர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டதாக ஊடகங்கள் கூறின. பாஜக 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் முன்னணி வகிப்பதாகக் கூறப்பட்டது.