பெங்களூரு: பெங்களூரு-சென்னை இடையே அமைக்கப்பட்டுவரும் விரைவு நெடுஞ்சாலைப் பணிகள் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கேற்ப திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் முக்கியமான நகரங்களைச் சாலை, புதிய ரயில் பாதைகள் மூலம் இணைக்கும் திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வேகமான வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 7 மணி நேரமாகிறது.
அதிவிரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் பயண நேரம் மூன்று மணி நேரமாகக் குறையும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 263 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவிரைவுச் சாலைக்கான பணிகள் ரூ.18,000 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கின.
இதுவரை 230 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அக்டோபருக்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
263 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த விரைவு சாலையில், கர்நாடக எல்லைக்கு உட்பட்ட 71 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹோஸ்கோட்டே-பெத்தமங்களா பகுதி வரையிலான பணிகள் நூறு விழுக்காடு நிறைவடைந்து, போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதிகளிலும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துள்ளன.
ஆனாலும், பெரும்புதூர்-அரக்கோணம்-காஞ்சிபுரம் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே மேம்பால அனுமதி, ஒப்பந்ததாரர்களின் நிதி நெருக்கடி காரணமாக பணிகள் சுணக்கமடைந்துள்ளன.
இச்சாலை பயன்பாட்டுக்கு வந்தபின்னர் வர்த்தகர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

