கோலார் தங்கவயலில் பெங்களூரு குப்பை: தமிழர்கள் எதிர்ப்பு

2 mins read
865ff2f1-5ac2-4a20-b4ee-e00284806d2f
கோலார் தங்கவயல். - படம்: இந்து தமிழ்

பெங்களூரு: பெங்களூரு மாநகரின் குப்பைகளை கோலார் தங்கவயலில் கொட்டுவதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘குட்டி இங்கிலாந்தாக’ விளங்கிய தங்கவயலை குப்பை மேடாக மாற்றக்கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் டெய்லர் 1880ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கச் சுரங்கத்தை அமைத்தார்.

அங்கு 800 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதால் தங்கவயல் ஆசியாவின் பெரிய தொழில் நகரமாக மாறியது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, கோலார் தங்கவயலில் அனைத்துவிதமான‌ நவீன வசதிகளும் இருந்ததால் அது ‘குட்டி இங்கிலாந்து’ என்று அழைக்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்குமேல் லாபகரமாகச் செயல்பட்டது தங்கச் சுரங்கம். பின்னர் அது நட்டத்தில் இயங்குவதாகக்கூறி 2001ஆம் ஆண்டு மூடப்பட்டதால் அந்த நிலப்பகுதி பாழடைந்து உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு பெங்களூரு மாநகரின் குப்பைகளைக் காலியாகக் கிடக்கும் கோலார் தங்கவயலில் கொட்ட முடிவெடுத்துள்ளது.

பெங்களூரு நகரில் அன்றாடம் 3,500 டன் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்கின்றனர். அதைக் கொட்டப் போதிய இடம் கிடைக்காமல் பெங்களூரு மாநகராட்சி திணறிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இவ்வேளையில் பெங்களூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் கோலார் தங்கவயல் சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான 15,000 ஏக்கர் நிலம் இருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது.

அங்கு 300 ஏக்கர் நிலத்தைத் தேர்வுசெய்து பெங்களூரு நகரின் குப்பைகளைக் கொட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோலார் தங்கவயல் தமிழ் அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன், “தங்கம் விளைந்த பூமியில் குப்பை கொட்டுவதை ஏற்க முடியாது. அவ்வாறு செய்தால் இந்த ஊரின் பெருமை குலைந்து, குப்பை வயல் என்று அழைக்கப்படும் நிலை உருவாகும்,” என்று வருந்தினார்.

தங்கவயலில் மலைபோல சயனைடு மண் குவிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், அதில் சில நூறு டன் தங்கம் இருப்பதாக ஆய்வுகள் கூறுவதாகவும் அங்குக் குப்பை கொட்டினால் அந்த ‌மண்ணும் சுரங்கத்திற்குள் இருக்கும் கனிம வளங்களும் களவு போக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் தீமைகளால் மக்களுக்கும் பிற‌ உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதையும் அவர் சுட்டினார்.

கர்நாடக அரசின் முடிவுக்கு கோலார் தங்கவயலின் தொழிலாளர் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ், பாஜக, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பெரும்பாலான கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோலார் தங்கவயல் சட்டமன்ற உறுப்பினர் ரூபகலா, “இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளேன். அரசு இந்த முடிவைக் கைவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்