பெங்களூரு: இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் இந்தியாவின் பெங்களூரு மாநகரவாசிகள் இணைய மோசடிகள் மூலம் ரூ.1,242.7 கோடியைப் (S$193 மில்லியன்) பறிகொடுத்தனர்.
பெங்களூரு மாநகரில் 2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 12,356 இணையக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, மாதத்திற்குச் சராசரியாக 1,544 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டில் மாதத்திற்குச் சராசரியாக 1,470 குற்றங்கள் என்ற வகையில், ஒட்டுமொத்தமாக 17,633 இணையக் குற்றங்கள் பதிவாகின.
ஆயினும், இணையக் குற்றவாளிகளுக்கு இவ்வாண்டே சிறப்பானதாக அமைந்துள்ளது. ஏனெனில், 2023ஆம் ஆண்டைப்போல் இவ்வாண்டு இரட்டிப்புப் பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர்.
மேலும், 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளின் கூட்டுத்தொகையைக் காட்டிலும் இணைய மோசடிகள் மூலம் இவ்வாண்டு அதிக பணம் பறிபோயுள்ளது.
ஆயினும், விசாரணையும் மோசடிப் பேர்வழிகள் பிடிபடுவதும் மந்தகதியிலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டு பதிவான 12,356 புகார்களில் 552 வழக்குகளில் மட்டுமே தீர்வுகாணப்பட்டுள்ளது. அதாவது, பறிபோன பணத்தில் ரூ.111.8 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
மோசடிப் பேர்வழிகள் பணம் பறிக்க புதுப் புது வழிகளைக் கையாள்வதாக குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் ஆர்வலர்களும் மோசடிகளில் சிக்கி பெரும்பணத்தை இழந்துவிட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தூதஞ்சல் சேவைகள், ஆதார் எண்ணுடன் கூடிய பணப் பரிமாற்றம், வேலைவாய்ப்பு போன்ற வழிகளையும் மோசடிப் பேர்வழிகள் கையாள்வதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பெரும்பாலான மோசடி வழக்குகள் தீர்க்கப்படாததற்கு இணையக் குற்றப்பிரிவுப் புலனாய்வுத் துறையில் போதிய ஊழியர்கள் இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவில் 39% பணியிடங்கள் காலியாக இருப்பதாக ‘டெக்கன் ஹெரால்டு’ ஊடகச் செய்தி தெரிவித்தது.
இதனால், மற்ற அதிகாரிகள் மிகுந்த வேலை நெருக்கடிக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது.

