மருத்துவர், பொறியாளர்போல் நடித்து 15 பெண்களை மணந்த ஆடவர்

2 mins read
c7999920-137a-44d1-952e-8de5b0ea4f0d
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகக் கூறப்படும் மகேஷ் நாயக். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரைச் சேர்ந்த 35 வயது ஆடவர் ஒருவர் பல பெண்களை ஏமாற்றி மணந்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மகேஷ் நாயக் என்ற அந்த ஆடவர் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டில் மகேஷ் மணந்துகொண்ட மென்பொறியாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரைக் காவல்துறை கைதுசெய்தது.

அந்த 15 பெண்களில் நால்வர்க்கு மகேஷ் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், மகேஷ் தன்னையும் ஏமாற்றிவிட்டதாகக் கூறி இன்னொரு பெண்ணும் காவல்துறையை நாடியுள்ளார்.

பெண்களைத் தனது வலையில் வீழ்த்த மகேஷ் திருமண இணையத்தளங்களைப் பயன்படுத்தினார். பெரும்பாலான நேரங்களில் அவர் தன்னை ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் எனக் காட்டிக்கொண்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

தான் ஒரு மருத்துவர் என்பதைப் பிறர் நம்ப வேண்டும் என்பதற்காக துமக்கூரில் ஒரு போலி மருந்தகத்தை மகேஷ் திறந்தார். அங்கு தாதி ஒருவரையும் அவர் பணியமர்த்தி இருந்ததாகக் கூறப்பட்டது.

மகேஷ் பேசிய மோசமான ஆங்கிலமே பெண்கள் பலருக்கும் அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது ஆங்கில மொழித்திறன் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இன்னும் பல பெண்கள் அவரது வலையில் வீழ்ந்திருக்கக்கூடும் எனக் காவல்துறை கூறியது.

இவ்வாண்டு ஜனவரியில் மைசூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் மகேஷுக்குத் திருமணம் நடந்தது.

அதன்பின் மருந்தகம் திறக்க வேண்டும் எனக் கூறி, பணம் கேட்டு தம்மைத் துன்புறுத்துவதாகக் கூறி, காவல்துறையிடம் அப்பெண் புகாரளித்தார்.

மகேஷ் கேட்டபடி பணம் தராததால் தனது நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகிவிட்டதாக அப்பெண் தமது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மகேஷ் எப்போதாவதுதான் தனது மனைவிகளைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. அவர் மணந்துகொண்டவர்களில் பலரும் நன்கு படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள். அதனால் பணத்திற்காக மகேஷை அவர்கள் நம்பியிருக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அவர்களில் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தும் அவமானத்திற்கும் களங்கத்திற்கும் அஞ்சி, காவல்துறையை நாடவில்லை என்று சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்