பெங்களூரு கூட்ட நெரிசல்: மாண்டோர் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்

2 mins read
9e44d159-9924-4494-9398-4fd7433f25e8
கூட்ட நெரிசலில் மாண்டோரில் மூவர் பதின்ம வயதினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. - படம்: என்டிடிவி

பெங்களூரு: பெங்களூரின் சின்னசாமி அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரும் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஆக இளையவருக்கு வயது 13.

மாண்டோரில் மூவர் பதின்மவயதினர், ஆறு பேர் 20லிருந்து 30 வயதுக்கு உட்பட்டோர். 18 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரிமியர் லீக் (ஐபிஎல்) வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச்சென்ற பெங்களூரு அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க நண்பர்களுடன் அவர்கள் சின்னசாமி அரங்கிற்குச் சென்றனர்.

குதூகலக் கொண்டாட்டமாகத் தொடங்கிய நிகழ்ச்சி கூட்ட நெரிசல் காரணமாக துயர சம்பவத்தில் முடிந்தது.

அவசரமான ஏற்பாடுகள், போதுமான அளவு திட்டமிடாதது, தீவிர ரசிகர்களின் பெருங்கூட்டம் ஆகியவை அத்துயர நிகழ்விற்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.

பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு வெற்றி நிகழ்ச்சியை நடத்த பெங்களூரு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் அணியின் ஏற்பாட்டாளர்களும் கொண்டாட்டத்தை நடத்தினர்.

பிற்பகல் 3.14 மணிவாக்கில் அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் மீறி பெங்களூரு அணி வெற்றி நிகழ்ச்சியை உறுதிப்படுத்தியதோடு அனுமதி இலவசம் என்றும் அறிவித்தது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற தகவல் கிடைத்ததும் கொண்டாட்டம் கலவரமானது. சிலர் நுழைவாயில்களைத் தாண்டிக்குதிக்க முற்பட்டனர். வேறு சிலர் தடுப்புகளைத் தள்ளிவிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறினர்.

இந்நிலையில், கர்நாடக அரசாங்கம் பெரிய நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்குமான புதிய செயல்முறை தரநிலைகளை உருவாக்கவிருக்கிறது.

மாண்டோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த கர்நாடக அரசாங்கம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது.

நட்சத்திர விளையாட்டாளர் விராத் கோஹ்லி, சம்பவம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பெங்களூரு அணியும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் இணைந்து மாண்டோரின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவிருப்பதாகத் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்