விமானம் தாமதமானதால் பயணிகள் ஆவேசம்; விமான நிலையத்தில் போராட்டம்

விமானம் தாமதமானதால் பயணிகள் ஆவேசம்; விமான நிலையத்தில் போராட்டம்

2 mins read
18 மணிநேரக் காத்திருப்பால் சோர்ந்துபோன பயணிகள்
5388df50-4f9e-4f33-9d86-b368fe6cf4d9
விமானத் தாமதம் குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 180 பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளாகினர். - படம்: என்டிடிவி

பெங்களூர்: பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நேப்பாளம் செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ‘மோசமான வானிலை’ காரணமாக ஏறத்தாழ 18 மணி நேரம் தாமதமானது.

இதனால், ஆத்திரமடைந்த 180க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திற்குள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழனன்று காலை 10:30 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்ட விமானம், காத்மாண்டில் தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.

மறுநாள் காலை மீண்டும் புறப்பட்ட விமானம், அப்போதும் காத்மாண்டில் இறங்க முடியாமல் லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது.

இந்தச் சூழலில், நீண்ட நேரக் காத்திருப்பு, தாமதத்தால் சோர்ந்துபோன பயணிகள் விமானத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, விமானம் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கே சென்றது.

விமான நிலையத்தில் முழக்கம்

பெங்களூரு திரும்பியதும் ஏறக்குறைய 180 பயணிகள் முனையம் 2ன் குடிநுழைவுப் பகுதி அருகே திரண்டனர்.

கர்நாடகாவிலிருந்து 10 நாள் நேப்பாளச் சுற்றுப்பயணம் செல்லவிருந்த அவர்கள், முறையான தகவல்களை வழங்காத விமான நிறுவனத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

பலர் அங்கேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

விமான நிறுவனம் விளக்கம்

இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காத்மாண்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவே பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்று.

“பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பயணத்தை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

“நாளை மாற்று விமானத்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

வானிலை காரணம் என்றாலும், தங்களுக்கு முறையான தகவல் தராமல் சிரமப்படுத்தியதே போராட்டத்திற்குக் காரணம் எனப் பயணிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்