பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வழக்கத்திற்கு மாறாகக் காணப்பட்ட விதிகளை வாசித்த ஒரு பெண்ணால் அதை நம்ப முடியவில்லை.
‘மெதுவோட்டம் கூடாது’, ‘கடிகைச் சுற்றாக நடக்கவும்’, ‘விளையாட்டு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படா’ போன்ற விதிகளைக் கொண்ட பலகையைப் படம் பிடித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் அந்தப் பெண்.
இந்திராநகர் பூங்காவில் இவ்வாறு மெதுவோட்டத்திற்குத் தடை விதிப்பதன் நோக்கம் என்ன என்று தம் பதிவில் வினவினார் அவர்.
பெங்களூரில் பொது இடங்கள் அதிகம் இல்லாத நிலையில் பூங்காக்களின் பயன்பாட்டை இவ்வாறு கட்டுப்படுத்துவதையும் பதிவு சுட்டிக்காட்டியது. இதுபோன்ற விசித்திரமான விதிகளை நடப்புக்குக் கொண்டு வரும் அதிகாரிகளையும் அந்தப் பதிவு விமர்சித்து இருந்தது.
இந்தப் பதிவு வெகு விரைவாக ஊடகவாசிகளின் கவனத்தைப் பெற்றது. ‘யாராவது வலஞ்சுழித்து நடப்பதற்குப் பதிலாக எதிர்த்திசையில் சென்றால் என்ன ஆகுமோ?’ என்று ஒருவர் பதிவிட்டார்.
இதற்குமுன் அந்த விதிகளைத் தான் கிழித்ததாகக் குறிப்பிட்ட மற்றொருவர், மீண்டும் அந்த விதிகளை அதிகாரிகள் வைத்துள்ளதாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே, இதுபோன்ற விதிகளுக்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. பூங்காவின் தடம் மிகக் குறுகலாக இருப்பதால் அங்கு மெதுவோட்டம் ஓடுவது சிரமம் மிகுந்தது என்றார் ஒருவர்.

