பெங்களூரு: உயிரைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் அவசர மருத்துவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, மோட்டார்சைக்கிளில் சென்ற இணையரின் உயிரைப் பறித்தது.
இவ்விபத்து இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு 11 மணியளவில் நேர்ந்தது.
போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்ததால் சாலையில் நின்றிருந்த மோட்டார்சைக்கிள்கள்மீது அந்த மருத்துவ வாகனம் மோதியதாகக் கூறப்பட்டது.
வேகமாகச் சென்ற மருத்துவ வாகனம் மூன்று மோட்டார்சைக்கிள்கள்மீது மோதியதாகவும் அவற்றில் ஒன்றைச் சில மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்றதாகவும் சொல்லப்பட்டது. அச்சாலையில் இருந்த போக்குவரத்துக் காவல்துறைக் கூண்டுமீது மோதியபின் அந்த மருத்துவ வாகனம் நின்றது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற 40 வயது இஸ்மாயிலும் அவரின் மனைவி 33 வயது சமீன் பானுவும் கடுமையாகக் காயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சற்று நேரத்தில் இஸ்மாயில் இறந்துவிட்டதாகவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பானுவின் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
காயமுற்ற மேலும் இருவர் அருகிலிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆத்திரமடைந்த வழிப்போக்கர்கள் அந்த மருத்துவ வாகனத்தைத் தள்ளி குப்புறக் கவிழ்த்ததாகக் கூறப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய மருத்துவ வாகனத்தின் ஓட்டுநரான அசோக் அவ்விடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். ஆயினும், ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை அவரைக் கைதுசெய்து, வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகிறது.

