போக்குவரத்து நெரிசலில் மனைவியிடமிருந்து கணவர் தப்பியோட்டம்

3 mins read
8982b296-8d5b-4ad0-978e-3154a503d22b
படம்: இபிஏ -

கடும் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போன நகர்களில் இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரும் ஒன்று.

ஆனால், அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ஒருவர்.

பிப்ரவரி 16ஆம் தேதி, மஹாதேவபுரா எனும் பகுதியில் புதுமணத் தம்பதியர் காரில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.

காரிலிருந்து திடீரென இறங்கிய மணமகன், அங்கிருந்து தப்பியோடினார்.

தலைமறைவான மணமகனை இரு வாரங்களுக்கும் மேலாக தேடியபோது அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், மார்ச் 5ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்போது அவரைத் தேடி பிடிக்கும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

தாங்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிடப்போவதாக முன்னாள் காதலி மிரட்டியதால், விஜய் ஜார்ஜ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் மனவுளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

ஜார்ஜுக்கும் மணப்பெண்ணுக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் நடந்தேறியது. தம்முடைய முன்னாள் காதலி தம்மை மிரட்டுவதாக, திருமணம் முடிந்த கையுடன் ஜார்ஜ் தம்மிடம் சொன்னதாக அவருடைய மனைவி, 22, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தளத்திடம் கூறினார்.

"அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நானும் என்னுடைய பெற்றோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் நான் அவரிடம் உறுதிபடக் கூறினேன்," என்று ஜார்ஜின் மனைவி சொன்னார்.

அவர் உத்தரவாதம் அளித்தும் ஜார்ஜ் அவரிடமிருந்து தப்பியோடிவிட்டார். திருமணத்துக்கு அடுத்த நாள் அத்தம்பதி தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்த காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது Pai Layout எனும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜார்ஜ், திடீரென கதவைத் திறந்து அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவியும் காரைவிட்டு இறங்கி அவரைப் பிடிக்க முற்பட்டார். எனினும், அவரால் கணவரைப் பிடிக்க முடியவில்லை.

கர்நாடகாவிலும் கோவாவிலும் மனிதவள நிறுவனம் ஒன்றை நடத்த, தம்முடைய கணவர் அவரின் தந்தைக்கு உதவி வந்ததாக ஜார்ஜின் மனைவி கூறினார்.

கோவாவில் இருந்தபோது, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஒருவரின் மனைவியுடன் ஜார்ஜுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அந்த மாதும் அதே நிறுவனத்தில் அலுவலராகப் பணிபுரிந்தார்.

இந்தக் கள்ளத் தொடர்பு குறித்து ஒரு கட்டத்தில் ஜார்ஜின் தாயாருக்குத் தெரியவந்தது. அப்போது அந்த மாதுடனான உறவை தாம் நிறுத்திக்கொள்வதாக ஜார்ஜ் அவருடைய தாயாருக்கு உத்தரவாதம் அளித்திருந்தார்.

ஆனாலும், யாருக்கும் தெரியாமல், தொடர்ந்து அந்த மாதுடன் ஜார்ஜ் தொடர்பில் இருந்து வந்தார்.

இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, ஜார்ஜின் திருமணத்தை வேறு எங்கேயாவது நடத்த அவருடைய குடும்பத்தார் முடிவு செய்ததாக ஜார்ஜின் மனைவி சொன்னார்.

"எங்களுடைய திருமணத்திற்கு முன்பே இந்தக் கள்ளத் தொடர்பு பற்றி எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அந்த மாதுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ள ஜார்ஜ் உறுதியளித்ததால், அவரைக் கரம்பிடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.

"அந்த முன்னாள் காதலி விடுக்கும் மிரட்டலுக்கு அஞ்சி, ஜார்ஜ் தப்பியோடிவிட்டார். உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. அவர் எங்கேயாவது பாதுகாப்பாக இருப்பார் என்றும் விரைவில் என்னிடம் திரும்புவார் என்றும் நம்பிக்கையுடன் உள்ளேன்," என்றார் ஜார்ஜின் மனைவி.