தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்தியாவும் மாலத்தீவும் 60 ஆண்டு அரசதந்திர உறவைப் பறைசாற்றுகின்றன

அரசதந்திர உறவைத் தாண்டி முறிக்க முடியாத நட்பு: இந்தியா, மாலத்தீவு

2 mins read
20bd1cf5-79ae-4fa0-9a34-13242913bcb6
(இடது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (வலது) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார். - படம்: ஏஎஃப்பி

மாலத்தீவு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவுடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட மோடி, மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு, துணையதிபர் உஸ் ஹுசெயின் முகமது ஆகியோரைச் சந்தித்தார்.

“இந்தியாவும் மாலத்தீவும் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படுகிறது. அது எங்கள் மக்களுக்குப் பெரியளவில் பயன் தரும். இனிவரும் ஆண்டுகளில் இந்த உறவை இன்னும் வலுப்படுத்தவிருக்கிறோம்,” என்று மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்திய-மாலத்தீவு நாடாளுமன்ற நட்புக் குழுவின் உருவாக்கத்தையும் மோடி வரவேற்றார்.

“மாலத்தீவின் திறன் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது,” என்று தமோடி குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பல விவகாரங்கள் குறித்து பேசிய மோடி, மாலத்தீவுக்கான 4,850 கோடி ரூபாய் வரையிலான கடனை அறிவித்தார்.

மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் உறுதிபடுத்துவதற்கான முயற்சிகளைச் செய்யப்போவதாகவும் தமோடி கூறினார்.

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுக்கு இந்தியப் பெருங்கடல் ஒரு உயிருள்ள சாட்சி என்று வர்ணித்த முய்சு, இரு நாடுகளும் மீள்திறன்மிக்க முறிக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் ஆதரவுக்கும் அது பாராட்டும் உறுதியான நட்புக்கும் முய்சு, மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவும் மாலத்தீவும் 60 ஆண்டுகால அரசதந்திர உறவை பறைசாற்றின.

அனைவரையும் ஒருங்கிணைக்கும் துடிப்பான பொருளியலை உருவாக்கவும் வட்டார அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தவும் மாலத்தீவு அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக முய்சு சொன்னார்.

அத்தகைய குறிக்கோள்களை அடைய இந்தியாவின் பங்காளித்துவ உறவு முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்