புதுடெல்லி: யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் அரிய கையெழுத்துப் பிரதிகள் கொண்ட பகவத் கீதையும் பரத முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரமும் சோ்க்கப்பட்டுள்ளன.
உலக அளவில் கலாசார-பாரம்பரிய தொன்மைமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, உலக நினைவுப் பதிவேட்டைக் கடந்த 1993ஆம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ உருவாக்கியது. கையால் எழுதப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை அப்பதிவேட்டில் இணைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து புதிதாக 74 பாரம்பரிய ஆவணங்கள் அதில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) சோ்க்கப்பட்டன.
இதன்மூலம், ‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் இருக்கும் மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 570ஆக உயா்ந்துள்ளது.
“கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை மகாராஷ்டிராவில் இருக்கும் பண்டாா்கா் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கிறது.
அந்நூல் கந்தா்வ வேதம், நாட்டிய வேதம் எனவும் அறியப்படுகிறது.
36,000 ஸ்லோகங்கள் கொண்ட அந்நூலில், நாட்டியம், நாடகம், உணா்ச்சி, இசை உள்ளிட்டவற்றின் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்திய சிந்தனையுடன் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ள பகவத் கீதையில் 18 அத்தியாயங்களும் 700 ஸ்லோகங்களும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வேதம், பெளத்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களின் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் நூலாகப் பகவத் கீதை விளங்குகிறது.
உலக அளவில் பல மொழிகளில் அந்நூல் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
பாரத நாகரிக பாரம்பரியத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 18) வெளியிட்ட தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகளின் சில பக்கங்களையும் அதில் அவர் பதிவிட்டாா்.
இந்தியக் கலாசாரத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்: மோடி
“யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருப்பது, காலத்தால் அழியாத நமது மதி நுட்பத்துக்கும் வளமான கலாசாரத்துக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்,” என இந்தியப் பிரதமர் மோடி கூறினார்.