அகமதாபாத்: இந்தியக் கூட்டுறவு அமைச்சின் ‘பாரத் டாக்சி’ என்ற வாடகை கார் சேவை குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக டெல்லியில் பாரத் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துலக அளவில் செயல்பட்டுவரும் ‘ஓலா’, ‘உபெர்’ போன்ற பெரிய நிறுவனங்களுக்குச் சவால்விடும் வகையில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்திற்கும் இந்தச் சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காந்திநகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது தனியார் வாடகை கார் சேவை சந்தையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தொழிலாளர்களைத் திட்டமிட்டுச் சுரண்டுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அரசுக் கூட்டுறவுக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
இந்தப் புதிய மாற்று வழிமுறையானது வாடிக்கையாளர் அல்லது சேவை வழங்குநர் (ஓட்டுநர்) ஆகியோர் எந்தவொரு சுரண்டலையும் எதிர்கொள்ளாத ஒரு நியாயமான அமைப்பாக இருப்பது உறுதி செய்யப்படும் என்றார் அமித்ஷா.

