தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர்: ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக

2 mins read
c00d5dca-4622-43cc-a687-a696a0ae8797
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் வீரர்கள். - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் தற்பொழுது அதிபர் ஆட்சியின்கீழ் உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் தெரிவித்தாா்.

மணிப்பூரில் பெரும்பான்மைப் பிரிவினராக மெய்தேய் சமூகத்தினரும் சிறுபான்மை சமூகமாக குக்கி சமூகத்தினரும் உள்ளனா். இதில், மெய்தேய் சமூகத்தினருக்கும் பழங்குடியினா் அந்தஸ்து வழங்கும் பிரச்சினையில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் கலவரம் மூண்டது. தொடா் வன்முறையில் 250க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக முதல்வா் பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு அதிபர் ஆட்சி நடப்புக்கு வந்தது.

இந்நிலையில், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து 10 எம்எல்ஏக்களுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் விரைவில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங், மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப 44 எம்எல்ஏக்கள் மீண்டும் ஆட்சி அமைக்க தாங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இதை ஆளுநரிடம் தெரிவித்ததாகவும் பிரச்சினைகளுக்கு என்ன தீா்வு என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறினார். மக்களின் நலனுக்கு உகந்த வகையில் நல்ல முடிவு எடுப்பதாக ஆளுநா் பதிலளித்ததாக நம்பப்படுகிறது.

ஆட்சி அமைப்பது தொடா்பாக மணிப்பூா் பேரவைத் தலைவா் சத்யவா்தா, 44 எம்எல்ஏக்களை தனித் தனியாக சந்தித்தாா். புதிய அரசு அமைவதில் அவா்களில் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும் என்றாா்.

மணிப்பூரில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு ஆளும் பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. அதில், 32 மெய்தேய் எம்எல்ஏக்கள், 3 மணிப்பூரி முஸ்லிம் எம்எல்ஏக்கள், 9 நாகா எம்எல்ஏக்கள் என மொத்தம் 44 போ் இருந்தனா்.

காங்கிரஸ் கட்சிக்கு மெய்தேய் சமூகத்தைச் சோ்ந்த 5 எம்எல்ஏக்கள் உள்ளனா். 10 எம்எல்ஏக்கள் குக்கி சமூகத்தைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சுயேச்சை எம்எல்ஏ. ஒரு தொகுதி காலியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்