தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோட்டல் அறையில் மாண்டுகிடந்த இந்திய நடிகை

1 mins read
d220dfcf-23fe-4b45-9fcd-e876e76a4bbd
நடிகை ஆகாங்க்‌ஷா துபே, ஹோட்டல் அறையில் ஞாயிறுக்கிழமை (மார்ச் 26) மாண்டுகிடக்கக் காணப்பட்டார். படம்: இந்திய ஊடகம் -

பிரபல போஜ்புரி நடிகையும் மாடல் அழகியுமான ஆகாங்க்‌ஷா துபே, 25, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் ஞாயிறுக்கிழமை (மார்ச் 26) மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

காவல்துறையினர் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சார்நாத் எனும் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஆகாங்க்‌ஷா தங்கியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹோட்டல் அறையில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

"அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. எனினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த, பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்," என்று வாரணாசி காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்தார்.

இறப்பதற்கு முன்பு ஆகாங்க்‌ஷா அழுவதைக் காட்டும் காணொளி

இந்நிலையில், ஆகாங்க்‌ஷா இறப்பதற்கு முதல் நாள், இன்ஸ்டகிராம் நேரலையில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

அந்தக் காணொளியில் ஒன்றும் பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு தேம்பி அழுதார் ஆகாங்க்‌ஷா. அவர் மன ரீதியிலாக துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

இளம் நாயகியான ஆகாங்க்‌ஷா, இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆகாங்க்‌ஷா இடம்பெற்ற கடைசிப் பாடல், அவர் இறந்த சில மணி நேரத்தில் யூடியூப்பில் வெளியானது.

ஆகாங்க்‌ஷாவின் மரணம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.