புவனேஸ்வர்: மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் 40 ஆண்டுகளுக்குமுன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான நச்சுவாயுக் கசிவு நடந்த தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி நிறைவுபெற்றுள்ளது.
இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 2) இத்தகவலை வெளியிட்டனர்.
1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை, ‘அமெரிக்கன் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து ‘மீதைல் ஐசோசயனேட்’ நச்சுவாயு கசிந்தது.
அதில் 5,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர். நச்சுவாயுக் கசிவால் போபாலில் வசித்த அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின் மூடப்பட்ட அந்தத் தொழிற்சாலையில் 337 டன் அளவிலான நச்சுக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த நச்சுக் கழிவுகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 12 கொள்கலன்களில் பலத்த பாதுகாப்புடன், போபாலிலிருந்து 230 கி.மீ. தொலைவில் உள்ள பீதாம்பூர் எரியூட்டு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கொள்கலனிலும் கிட்டத்தட்ட 30 டன் நச்சுக்கழிவு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நச்சுக்கழிவுகளை வெளியேற்றுமுன், அந்தத் தொழிற்சாலையின் 200 மீட்டர் சுற்றுப்பரப்பு மூடப்பட்டது. ஊழியர்கள் 200 பேர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக 2015ஆம் ஆண்டில் சோதனை நடவடிக்கையாக, 10 டன் அளவிலான நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அகற்றப்பட்ட நச்சுக் கழிவுகளை எரியூட்டும் பணி முடிவடைய மூன்று முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையிலும் பல்லுயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் திடக்கழிவுகள் எரியூட்டப்பட்ட பிறகு குப்பை கொட்டுமிடத்தில் புதைக்கப்படும் என்று கூறும் ஆர்வலர்கள் சிலர் அதனால் நீர் மாசடையக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டபோது அந்தத் தொழிற்சாலையை நிர்வகித்த யூனியன் கார்பைடு நிறுவனமோ அதன் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல் நிறுவனமோ, கழிவுகளை அகற்றும்படி ஏன் கட்டாயப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போபாலில் 1969ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தத் தொழிற்சாலை, விவசாயிகளுக்காக மலிவான விலையில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரிப்பதுடன் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.


