திம்பு: இந்தியாவுக்கும் பூட்டானுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இணைப்புப் பணிகளை விரைவில் முடித்துவிடலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பூட்டானின் தலைநகர் திம்புவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மேம்பாட்டுக்காக ரூ.4,000 கோடி கடனுதவி வழங்குவது உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பூட்டானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமர் மோடி, தலைநகர் திம்புவில் அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கெசர் நாக்யெல் வாங்சுக்கை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பூட்டான் மற்றும் இந்தியாவை இணைக்கும் இரண்டு ரயில் திட்டங்களைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பூட்டான் தலைமைக்கு உறுதியளித்தார்.
அசாமின் கோக்ரஜார் நகருக்கும் பூட்டானின் கெலேபு இடையேயும் மேற்கு வங்காளத்தின் பனார்ஹட், பூட்டானில் உள்ள சாம்ட்சே இடையேயும் ரூ.4,033 கோடி செலவில் இந்தியாவின் முழு நிதியுதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையேயான ரயில் பாதை இணைப்புத் திட்டங்களின் முதல் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
மேலும், சுகாதாரம், மருந்துகள், மனநல மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளும் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பூட்டான் சாா்பில் வாரணாசியில் புத்த மடாலயம் கட்ட நிலம் வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
அத்துடன், இந்தியாவின் உதவியுடன் பூட்டானில் கட்டமைக்கப்பட்டுள்ள 1,020 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புனத்சங்சு-2 என்னும் நீர்மின் நிலையத்தை இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இது இந்தியா - பூட்டானின் நட்புறவு அடையாளம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
பூட்டானின் எரிசக்தித் துறை மேம்பாடும், ரயில் பாதை இணைப்பும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
ரயில் பாதை இணைப்பால் இரு நாடுகளும் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறுவதோடு வளமான எதிர்காலத்தைப் பெற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ரயில் இணைப்புப் பாதைக்கான பணிகள் முடிவடைந்தால், பூட்டானின் வர்த்தகர்களும் விவசாயிகளும் இந்தியாவின் மாபெரும் சந்தையால் பெரும் பயனடைவர் என்று கூறினார்.
மேலும், இந்தியாவுக்கு வருகை தரும் பூட்டானின் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் ஆகியோர் எளிதில் இந்தியாவுக்கு வந்து செல்லும் வகையில், ஜெலிஃபு நகரில் ஒரு குடிநுழைவுச் சோதனைச் சாவடி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

