தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் புகுந்து போட்டியாளரைத் தூக்கிய வனத்துறை

1 mins read
2b81e740-e03a-4071-8414-7d32d9908d46
கன்னட ‘பிக் பாஸ் 10’ போட்டியாளர் வர்த்தூர் சந்தோஷ். - படங்கள்: ஐஏஎன்எஸ்

பெங்களூரு: ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் ஒருவரை இந்தியாவின் கர்நாடக மாநில வனத்துறை கைதுசெய்துள்ளது.

கன்னட ‘பிக் பாஸ் 10’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள வர்த்தூர் சந்தோஷ், கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் புலிநகம் பொருத்தப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் புகுந்து சந்தோஷைக் கைதுசெய்தனர். திங்கட்கிழமை மாலைக்குள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக சந்தோஷ்மீது புகார் பதியப்பட்டுள்ளது. புலிநகம் பொருத்தப்பட்டிருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயியான அவர், வேளாண்மை இழிவான தொழிலன்று என்றும் உழவர்களும் நாகரிகமாக இருக்க முடியும் என்றும் கூறி வருபவர். ‘ஹல்லிகர்’ இனக் காளைகளை வளர்த்து வரும் அவர், காளைப் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார்.

சந்தோஷ்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு மூன்று முதல் ஏழாண்டுவரை சிறையும் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்னொருவரிடமிருந்து அந்த நகையை வாங்கி அணிந்திருந்ததாகக் கூறிய சந்தோஷ், அது உண்மையிலேயே புலிநகந்தானா என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்