தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 22 பேர் பலி

2 mins read
16a82f2c-d79c-48dd-9731-66f4603909f2
பீகாரின் பல பகுதிகளில் கடும் மழை, புயல் நிகழ வாய்ப்பு உள்ளதால் அந்தப் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கி ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் வெளியே நடமாடியோரை மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

பெகுசராய் என்னும் பகுதியில் ஐந்து பேரும் தர்பங்காவில் நால்வரும் மதுபனி என்னும் இடத்தில் மூவரும் மின்னல் தாக்கி மாண்ட நிலையில் சமஸ்திபூரிலும் அதேபோன்ற ஒரு மரணம் நிகழ்ந்தது.

இவை தவிர, அவுரங்காபாத் மற்றும் கயா உள்ளிட்ட பகுதிகளில் மேலும் அறுவர் மின்னல் தாக்கி மாண்டனர்.

பீகார் மாநில முதலமைச்சர் அலுவலகம் இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளது.

உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.

அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் புயலும் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் மின்னல் அல்லது இடியுடன் கூடிய மழையால் 275 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதி ஆண்டுக்கான பொருளியல் கணக்கெடுப்பு அறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்