தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று கட்டங்களாக நடக்கும் பீகார் தேர்தல்

2 mins read
38787a6f-eb99-4851-8d83-8361eef7e3f7
பீகாரின் மிகவும் முக்கிய பண்டிகையான சாட் பூஜை அக்டோபர் 28ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே, அந்தப் பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 15 தேதிக்குள் மூன்று கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

243 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

அதேபோல், இம்முறையும் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் மிகவும் முக்கியப் பண்டிகையான சாட் பூஜை அக்டோபர் 28ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே, அந்தப் பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பீகாரில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் அம்மாநிலத்துக்குச் செல்ல இருக்கிறார். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி, மாநில இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, ஞானேஷ் குமாரின் பீகார் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

பெயர் விடுபட்டவர்கள், தகுந்த ஆவணங்களுடன் தங்கள் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்தது.

எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதுதான், எவ்வளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதன் உண்மை நிலவரம் தெரியவரும்.

பெயர் நீக்கத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறப்புத் தீவிர திருத்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்