பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் சனிக்கிழமை (அக்டோபர் 4) ஆய்வு மேற்கொண்டார்.
பீகார் மாநில சட்டப்மன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பீகார் தலைநகர் பாட்னா சென்றனர்.
அவர்கள் அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவர். இதன் அடிப்படையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பீகார் அரசியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
“சாத் பண்டிகை அக்டோபர் 28ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகே தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படலாம். அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிக்குள் முதல்கட்ட தேர்தல் நடைபெறக்கூடும். நவம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து வரும் 8ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் கூடிய விரைவில் சூடுபிடிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.