பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்படி, முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளன.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய முதல்வராக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் பதவி வகிக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இப்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
செப்டம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பீகாரில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இரண்டு கட்டத் தேர்தல் அறிவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பீகாருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டார்.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த நவம்பர் மாதம் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
கூட்டணி இழுபறி நீங்கியது
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பாஜக, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வந்தது.
தற்போது, முக்கியக் கட்சிகளான ஜேடியு மற்றும் பாஜக இடையே தலா 101 இடங்கள் என்ற ஒப்பந்தத்துடன் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.