பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் முன்பே, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் பறந்து பறந்து பிரசாரம் செய்யத் தயாராகி வருகிறார்கள்.
அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்வதற்கு வசதியாக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்து வருகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் 15 ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இண்டியா கூட்டணியும் ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் சார்பாக பிரசாரப் பணிகளுக்கு என இரண்டு ஹெலிகாப்டர்களை முழு நேரமாகப் பயன்படுத்த உள்ளனர்.
ஒற்றை இயந்திரம் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இயந்திரங்கள் கொண்ட ஹெலிகாப்டர்களின் கட்டணம் ஒரு மணிநேரத்துக்கு ரூ.4 லட்சம் ஆகும்.
இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு ஹெலிகாப்டர்களில் பறக்க விருப்பம் இல்லை என்றும் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொள்வார் என்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அதேசமயம், குறுகிய நேரத்தில் அதிக இடங்களில் மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய முடியும் என்பதால் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முடிந்தவரை பல்வேறு தொகுதிகளில் வலம் வந்து பிரசாரத்தை எளிதாக்க ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.