பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (அக்டோபர் 15) பீகார் மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
தனது பிரசாரத்தின் முதல் அங்கமாக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ என்ற தலைப்பின்கீழ் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திரளாகப் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு பீகார் பாஜக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, பீகாரில் கட்சி மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகளில் தொண்டர்களின் பங்களிப்பை அவர் பாராட்டிப் புகழ்ந்தார்.
ஒவ்வொரு பாஜக தொண்டரும் அர்ப்பணிப்புடனும் முழு ஆற்றலுடனும் செயல்பட்டு பீகாரில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவதாகவும் அத்தகைய அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டர்களுடன் கலந்துரையாடுவது தமக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகவும் திரு மோடி கூறினார்.
சில தொண்டர்களுடன் அவர் நேரடியாகவும் பேசினார்.
மோடியின் இந்தப் பிரசாரப் பாணி பாஜக தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளதாக அக்கட்சியின் பீகார் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, பீகாரில் நவம்பர் 6,11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இவர்களில் 50 பேர் நடப்பு எம்எல்ஏக்கள் ஆவர். இம்முறை பெரும்பாலான அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.