பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆர்ஜேடி 135 தொகுதிகளிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக உள்ள ‘இண்டியா’வின் உறுப்பினர்கள், பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துக் கடந்த சில வாரங்களாக விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை அறிவிக்கக் காங்கிரஸ் கட்சியும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆர்ஜேடி கட்சிக்கு 135 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 61 தொகுதிகள், விகாஷீல் இன்சான்(விஐபி) 16, இடது சாரிகளுக்கு 29 முதல் 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கூட்டணியால் துணை முதல்வர்கள் யார் என்பது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை
இதனிடையே, துணை முதல்வர் வேட்பாளராகத் தனது பெயரை அறிவிக்க விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியமைத்துள்ளது. இதில் முக்கிய கூட்டணியாகப் பாஜக உள்ளது.
கடந்த 2020, பீகார் சட்டமன்றத் தேர்தலில், ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இந்த முறை அந்தக் கட்சி குறைவான இடங்களிலேயே போட்டியிடுகிறது.
கடந்த முறை காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு மிகக்குறைவாக 19 எம்எல்ஏக்களை பெற்றது.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யாதது படுதோல்விக்குக் காரணம் எனப் புகார் எழுந்தது.
காங்கிரஸின் இந்தத் தவறான நடவடிக்கையால் தேஜஸ்வி யாதவ், பீகாரில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார் என்று ஆர்ஜேடி கட்சியினர் புலம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.