தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் முதல்வர் இல்லம் முற்றுகை: மாணவர்கள் மீது தடியடி

2 mins read
11c11700-eea1-44b5-b5f4-39a7d2df080a
முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் மீது காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.  - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் அரசுப் பணியாளர் தேர்வு அமைப்பு நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், மறுதேர்வு நடத்தும்படி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் அமைப்பினர் பீகார் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது, அவர்கள் மீது தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

தற்போது பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசுப் பணியாளர் தேர்வு அமைப்பு சார்பில் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு இம்மாதம் 13ஆம் தேதி நடந்தது.

அப்போது, தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, வினாத்தாள் கசிந்ததாக குறிப்பிடப்பட்ட தேர்வு நிலையத்தில் மட்டும், வரும் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், மற்ற நிலையங்களில் நடத்தப்பட்ட தேர்வு செல்லுபடியாகும் என்றும், தேர்வு அமைப்பின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேஷ் குமார் அறிவித்தார்.

எக்காரணம் கொண்டும் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; எனவே, அடுத்தக்கட்டமாக தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதனால் அதிருப்தியடைந்த மாணவர் அமைப்பினர், மறுதேர்வு நடத்தக்கோரி, 10 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்துக்கு ஜன் சுவராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று ஆதரவு அளித்தார். அப்போது, மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து மாநில அரசின் தலைமை செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்க அரசு தரப்பு மறுத்ததால், மாணவர் அமைப்பின் ஒரு பிரிவினர் முதல்வர் நிதீஷ் குமாரின் இல்லத்தை முற்றுகையிட சென்றனர்.

தடையை மீறி முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் மீது காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.

குறிப்புச் சொற்கள்