பீகார் பொதுத்தேர்தல்: நவம்பர் 6, 11 வாக்குப் பதிவு

2 mins read
62f4cf68-f237-46a7-8755-d2f93d687dd7
பீகாரில் ஆட்சி நடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பீகார் தேர்தலுக்கான அறிவிப்பைத் திங்கட்கிழமை (அக்டோபர் 6) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் வெளியிட்டனர்.

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 21ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3.50 கோடி பெண் வாக்காளர்களும், 3.92 கோடி ஆண் வாக்காளர்களும், 1,725 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். முதன்முறை வாக்காளர்கள் 14.1 லட்சம் பேர் உள்ளனர்.

பீகாரில் மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் கிராமப்புறங்களில் 76,801 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறங்களில் 13,911 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

தற்போதுள்ள பீகார் சட்​டமன்றத்தின் பதவிக் காலம் நவம்​பர் 22ஆம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சட்​டமன்றத் தேர்தலில் பாஜக 80 தொகுதிகள், ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகள், ஹெச்ஏஎம்(எஸ்) 4 தொகுதிகள், சுயேச்சைகள் 2 தொகுதிகள் எனத் தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77 தொகுதிகள், காங்கிரஸ் 19 தொகுதிகள், சிபிஐ (எம்எல்) 11 தொகுதிகள், சிபிஐ(எம்) 2 தொகுதிகள், சிபிஐ 2 தொகுதிகள் என மகாகத்பந்தன் 111 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இம்முறையும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்னர் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்யத் தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் பீகார் தலைநகர் பாட்னா சென்றனர்.

அவர்​கள் அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் மூத்த அதி​காரி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்தினர்.

இதன் அடிப்​படை​யில் பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​பட்டுள்ளது. இதற்கிடையே பீகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

அண்மைய கருத்துக்கணிப்புகள் அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றன. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து ஜன் சுராஜ் என்ற கட்சியைத் துவக்கியுள்ள பிரசாந்த் கிஷோர், பீகாரில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்