பாட்னா: போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்ய பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
அதனைத் தொடர்ந்து, அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களாக வேலையில் சேர்ந்தோரின் கல்வித் தகுதிகளை ஆய்வு செய்யுமாறு ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
ஏறத்தாழ 3.5 லட்சம் ஆசிரியர்களுக்குச் சொந்தமான 6.7 லட்சம் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அந்த விசாரணையின்போது பல ஆசிரியர்கள் தங்கள் பணியிலிருந்து விலகிவிட்டனர்.
இறுதியில் 3,035 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை மாநில அரசிடம் விசாரணைக் குழு அளித்தது.
இந்நிலையில், மாநிலக் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) கூறுகையில், “ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பலர், போலியான கல்லூரிகள் வழங்கிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்திருப்பதும் வேறு சிலர் ஆசிரியர் பணியைப் பெற போலியான கல்வித் தகுதியைப் பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்றார்.
மேலும், “போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலையில் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“போலி ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்ற ஊதியம், கௌரவ ஊதியம் ஆகியவற்றை வட்டியுடன் கல்வித் துறை திரும்பப் பெறும்,” என்றார் அவர்.

